தினகரன் செய்தி-
71 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவில் வாரம் 3 முட்டை கருணாநிதி தொடங்கி வைத்தார் .
சென்னை, ஜூலை 16: பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவில் வாரந்தோறும் மூன்று முட்டைகள் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி, 71 லட்சம் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்படுகிறது.
சத்துணவில் வாரம் மூன்று முட்டை வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்தநாளான நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தொடக்க விழா நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு உணவு, முட்டை, சர்க்கரைப் பொங்கல் வழங்கி, அவர் பேசியதாவது:
காமராசரின் நினைவாக அரசு என்ன செய்கிறது என்ற கேள்விக்கு அளிக்கப்படும் பதிலாக சத்துணவுத் திட்டத்தை மேலும் வலுவுள்ளதாக, ஊட்டச்சத்து மிகுந்ததாக ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இனி வாரம் மூன்று முறை சிறார்க்கு சத்துணவோடு முட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முட்டை வழங்குவதற்காக சொல்லி விட்டு, வழங்கப்பட்ட முட்டையை நிறுத்துகின்ற அரசாக இந்த அரசு இல்லாமல், ஒரு முட்டை, இரண்டு முட்டை, மூன்று முட்டை வழங்குகிறோம் என்று வழங்கிக் காட்டுகின்ற அரசுதான் உங்களால் உருவாக்கப்பட்ட இந்த தி.மு.க. அரசு.
வாக்குறுதிகளை வழங்கிவிடலாம். ஆனால், அதை நிறைவேற்றுவது மிக, மிக சிரமம். சில பேர் வாக்குறுதிகளை சுலபமாக வழங்குவார்கள். எப்படி சுலபம் என்றால், நிறைவேற்றவா போகிறோம் என்ற நம்பிக்கையோடு வாக்குறுதிகளை வழங்குவார்கள்.
இன்னும் சிலர், வெற்றி பெறவா போகிறோம், நாம் வாக்குறுதி வழங்கினால் நிறைவேற்றுவதற்கு என்று அந்த எண்ணத்தோடு வழங்குவார்கள். ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தவரை நாங்கள் உருவாக்கிய கூட்டணி மீது எங்களுக்கு நம்பிக்கை நிறைய உண்டு. இந்தக் கூட்டணி வெற்றிபெறாவிட்டால், வேறு எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்ற அந்த மனத் தெம்போடுதான் நான் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை மூலமாக வழங்கினேன்.
காமராஜர் கட்சிச் சார்பற்ற முறையில் ஒரு பெருந்தலைவர். அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. ஏனெனில், முன்பு இதை கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து வேறொரு ஆட்சி வந்த போது, தி.மு.க. அரசின் அறிவிப்பை செயல்படுத்தவில்லை.
மேலும், சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவதையும் அந்த ஆட்சி நிறுத்தி விட்டது. அதற்குப் பிறகு, மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு, இன்றைக்கு நாங்கள் மூன்று முட்டைகள் வழங்குகின்ற விழாவினை நடத்துகிறோம். சிறார், சிறுமிகளுக்கு பள்ளிகளுக்கு சென்றால் சத்துணவு கிடைக்கும் என்ற ஆர்வத்தை தூண்டி, அதன் மூலம் அவர்களை கல்வியில் கருத்துள்ளவர்களாக ஆக்குவதே இதன் குறிக்கோள்.
கல்வி கற்றிட மூளை வளர்ச்சி மட்டும் போதாது. உடல் வளர்ச்சியும் தேவை. ஓடி விளையாடினால் தான் இளம் எலும்புகள் வளரும். தமிழகத்தில் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தாத நிலைமைதான் இருக்கிறது. அதனால்தான், சத்தான உணவாக முட்டை வழங்கி, ஒரு முட்டை இரண்டாகி, தற்போது மூன்று முட்டை என்று ஆக்கியிருக்கிறோம். அளவுக்கு மீறினால் அதுவும் உடம்புக்குக் கெடுதி என்பதால், இந்த 3 முட்டையோடு நிச்சயமாக நிறுத்தப்படும். அ, ஆ எழுத்துக்களில் கடைசியாகப் பார்த்தால், மூன்று முட்டைகள் போட்டு ஃ என்ற ஆயுத எழுத்து. இந்த ஆயுத எழுத்தோடு, இந்த முட்டை எழுத்துக்களை நாம் நிறுத்திக் கொள்கிறோம்.
ஓர் அரசு கல்விக்கு இத்தகைய ஊக்கங்களை அளிக்கும் போது, பெற்றோர், உற்றார் உறவினர், தங்களுடைய குழந்தைகளை கல்வி கற்க தவறாமல் அனுப்பி, நல்ல உத்வேகத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான், காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று நாம் கொண்டாடுவதற்கு அர்த்தம். நாடு வளர, சமுதாயம் வளர, இளந்தலைமுறை வளர இந்த நாள் பெரிதும் உதவும்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
விழாவுக்கு சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, ÔÔஇந்த ஆண்டு 13,500 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். சென்னையில் ரூ.100 கோடியில் சர்வதேச தரத்துடன் மிகப் பெரிய நூலகம் அமைக்கப்படும்ÕÕ என்றார்.
முன்னதாக, தலைமை செயலாளர் திரிபாதி வரவேற்றார். அவர் பேசும்போது, Ôசத்துணவில் 3 முட்டைகள் வழங்கும் திட்டத்தில் 71 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள். ஒரு வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் வாரம் ஒரு முட்டை வழங்கப்படும். புதன்கிழமைதோறும் அங்கன்வாடி மையங்களில் இது வழங்கப்படும். இதில், 2 லட்சத்து 40 ஆயிரத்து 17 குழந்தைகள் பயனடைவார்கள். இந்த திட்டங்களுக்கு ரூ224 கோடி செலவாகும் என்றார். சமூக நலத்துறை செயலாளர் என்.எஸ்.பழனியப்பன் நன்றி கூறினார்.
Sunday, July 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//71 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவில் வாரம் 3 முட்டை கருணாநிதி தொடங்கி வைத்தார்//
சமீபத்தில் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய இருந்த தடங்கள்கள் நீங்கி இனி அரபு நாடுகளுக்கு முட்டைகளை தாராளமாக அனுப்பலாம் என்பதை படித்தது நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் இதுபோல் பல வளங்களை அதாவது, எ.கா அரிசி, முட்டை,மளிகை, மூலிகை, துணி, உடைகள், கச்சாப்பொருட்கள், கடல் உணவு வகைகள் ... என பலதரப்பட்ட வகைகளை மேலை நாட்டு பன்றிகளை மன்னிக்கவும் மனிதர்களை வளர்ப்பதற்கு நம் உள் நாட்டு ஆதிக்க பணவெறி பிடித்த பன்றிகள் மன்னிக்கவும் மனிதர்கள் ஏற்றுமதி என்கிற பெயரில் வானம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதே போல் மனித மூளைகளையும் மேலை நாட்டு முதலாலி வர்க்கங்களுக்கு ஏலம் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நியாயப்படி இந்த பூர்வீக மற்றும் தார்மீக சொத்துக்கள் அனைத்தும் உள் நாட்டு மக்கள் சுய நிறைவு கண்டபின் அதிக பட்சமாக மீதியைத்தான் நாம் ஏற்றுமதி செய்யவேண்டும். இங்க என்னடா என்றால் வாரத்திற்கு மூன்று முட்டைகள் தருவதை பெரிதாக பார்க்கிறோம்.
இருந்தாலும் இது வரவேற்கத்தக்கதே.
நல்ல பதிவை பகிர கொடுத்தமைக்கு மிக்க நன்றி manjari.
Post a Comment