முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேணல் ஆர்.ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சத்தை இங்கே தருகின்றோம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த பொழுது, ஹரிகரன் அதன் புலனாய்வுத்துறைத் தலைவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது
*குடும்பிமலை (தொப்பிகல) அரச படைகளால் கைப்பற்றப்பட்டமை குறித்தும் அதன் பின்னர் தொடரக்கூடிய இராணுவ முன்னெடுப்புகள் குறித்தும் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேணல் ஆர்.ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சத்தை இங்கே தருகின்றோம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த பொழுது, ஹரிகரன் அதன் புலனாய்வுத்துறைத் தலைவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: சோ.ஜெயமுரளி
http://www.thinakkural.com/news/2007/7/15/articles_page31310.htm
கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வசமிருந்த தொப்பிகல (Baron's Cap) எனும் கடைசி பலம்மிக்க தளத்தையும் தமது பாதுகாப்புப் படைகள் கைப்பற்றிவிட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அலட்டிக்கொள்ளாத அறிவிப்பொன்றின் (Terse announcement) மூலம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இந்த வெற்றிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி மட்டக்களப்புக்கு தெற்கே சுமார் 14 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொக்கட்டிச்சோலை வீழ்ச்சியடைந்ததையடுத்து தொப்பிகல எந்த நேரத்திலும் கைப்பற்றப்படலாமென்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் தூண்டப்பட்டுவிட்டது. தொப்பிகலவுக்கான வழங்கற் பாதைகளான மேற்கேயுள்ள `ஏ5' நெடுஞ்சாலையிலிருந்தும் தென்மேற்கிலுள்ள நெடுஞ்சாலையான `ஏ-27'இலிருந்தும் விடுதலைப்புலிகளை அகற்றும் நடவடிக்கைகளை படையினர் ஏறத்தாழ முடித்துவிடும் தருணத்திலேயே இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
ஆனால், இந்த நடவடிக்கைக்கு 3 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன. 300 முதல் 400 வரையிலான போராளிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த இப்பகுதியை கைப்பற்றுவதற்கு வலுவான போரிடும் திறன் படைத்த 2 படைப்பிரிவுகளைச் சேர்ந்த (2 பிரிகேட்) படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். `கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை அகற்றுதல்' எனும் திட்டத்தில் இது நான்கிலொரு பங்கு காலத்தை எடுத்துள்ளது. இயல்பான புவியியல் அமைப்பு, மிதிவெடிகள் மற்றும் வெடிபொருட்களின் நீண்ட பரம்பல் என்பன பாதுகாப்பு படைகளின் முன்னேற்ற வேகத்தை குறைத்திருந்தமையில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எப்படியிருந்தபொழுதும், விடுதலைப்புலிகளின் மீள் அமைதி, போராட்டக் களத்தில் அவர்கள் புகுத்தும் புதுமைகளை குறைத்து மதிப்பிட முடியாது. கனிந்த நிலையில் பறிப்பதற்கு தயாராகவுள்ள பழமொன்றைப்போல் தொப்பிகலவை வீழ்த்துவது சாத்தியமற்றது. வளங்கள் மற்றும் வெளியிலிருந்தான உதவிகள் தடுக்கப்பட்டிருந்த நிலையில் தொப்பிகலவிலிருந்த 300 திறமையான போராளிகளும் போராடுவதற்கு இயலாத நிலையை அடைந்திருக்கலாம். அத்துடன், அங்கிருந்தான அவர்களின் வெளியேறும் வழிகள் தடைப்பட்டமையாலும் அவர்கள் பின்வாங்கியிருக்கலாம்.
எனவே, தொப்பிகலவில் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ள படைகள் எதிர்பார்த்ததைவிட நீண்ட காலத்துக்கு அவர்கள் (படையினர்) அங்கு முடக்கப்படலாம். தொப்பிகல கைப்பற்றப்பட்டுவிட்ட பின்னரும் கூட விடுதலைப்புலிகளின் நடமாடும் போராளிப் பிரிவின் தாக்குதல்கள் அந்தப் பகுதியில் தொடரலாமென்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
படையினர் பொது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இசைந்து கொடுக்காமலேயே தமது நடவடிக்கைகளின் திட்டங்களை வகுத்திருந்தனர். உண்மையில், மூன்று பரிமாணங்களில் அவர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். தமக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை குறைத்தல், தற்பாதுகாப்புத் தாக்குதலில் ஈடுபடும் விடுதலைப்புலிகளை அகற்றுதல், தமது உயர் சூட்டுவலுவிலும் படை வலுவிலும் கவனத்தை செலுத்தல் என்பவையே அந்த மூன்று பரிமாணங்களுமாகும்.
இவ் இராணுவ நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கான அரசியல் அழுத்தங்கள் நிச்சயமாக இருந்த பொழுதும், இராணுவ தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தனது பாணியை மாற்றியிருக்கவில்லை. இதனால், படைகளின் இழப்பை அவரால் குறைத்துக்கொள்ளவும் முடிந்திருந்தது. இது எதிர்காலத்தில் நடைபெறப்போகும் நடவடிக்கைகளுக்கு பாரிய உந்துதலாகவும் அமையும். அத்துடன், வான் தாக்குதல்கள் மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களின் ஒன்றிணைந்த ரீதியிலான பயன்பாடானது விடுதலைப்புலிகளுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தாது போயிருந்தாலும் அவர்களின் போராடும் மனநிலையினை பாதித்திருக்கும். இவ்வாறான தாக்குதல் முறைமையினை எதிர்கால நடவடிக்கைகளிலும் நாம் காணலாம்.
கடந்த ஒரு வருடமாக கிழக்கில் இராணுவ ரீதியிலான பின்னடைவுகளை சந்தித்தமை மற்றும் அதிகார ஆளுகையில் கருணாவுடன் நீண்ட காலமாகத் தொடரும் இடர்பாடுகள் போன்றவற்றால் விடுதலைப்புலிகள் தமது பகுதிகளிலில் தயார்படுத்தல்களில் ஈடுபடுவது தவிர்க்கமுடியாததாகும்.
ரமேஸின் வெளியேற்றம்
விடுதலைப்புலிகள் தமது முக்கிய போராளிகளை பாதுகாப்பு முன்னரங்குகளிலிருந்து அழைத்திருந்தனர். புலனாய்வுத் துறையினரை மேற்ேகாள் காட்டி ஊடகங்கள் வெளியிட்ட கருத்துகள் உண்மையாயின் மட்டக்களப்பிலிருந்து ரமேஸ் தலைமையிலான 200 போராளிகள் கடந்த ஜூன் மாதத்தின் 2 ஆவது வாரத்தில் வெலிக்கந்தை, சேருநுவர, மூதூர் மற்றும் கிண்ணியாவிலுள்ள மணிராசகுளம் ஆகியவற்றின் காட்டுப் பகுதிகளூடாக வடக்கிற்கு சென்றுள்ளனர். எப்படியாயினும், கிழக்கில் மென் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொளள வேண்டும் என்பதற்காக சிறிய குழுக்களே சென்றிருக்க வாய்ப்புகளுள்ளன.
துரதிர்ஷ்டவசமான விடயமென்னவென்றால், இராணுவத்தின் தொப்பிகல கைப்பற்றலுடன் கிழக்கில் புலிகளின் நடவடிக்கைகள் முடிந்துவிடாது என்பதேயாகும். அங்கு கெரில்லா முறையிலான தாக்குதல்கள் முனைப்புப்பெறுவதற்கான வாய்ப்புகளுள்ளன. அரச சொத்துகளை தாக்கிவிட்டு தப்பியோடுதல், துருப்புகளின் நகர்வுகளை குழப்புவதற்கு கிளேமோர் தாக்குதல்கள், கருணா குழுவுடனான மோதல்களென்பன வரும் மாதங்களில் தமிழ்ப் பகுதிகளில் இடம்பெறலாம். அத்துடன், தப்பிச் செல்லும் புலிகளுடன் கடலில் மோதல்கள் இடம்பெறவும் சாத்தியங்களுண்டு.
கிழக்கில் இவ்வாறான நிலைமைகளுடன் கொழும்பிலுளள வெளிப்படையான இலக்குகள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தலாம். இதேவேளை, கிழக்கில் படையினரின் நடவடிக்கை பூர்த்தியடைந்து அல்லது புலிகளின் தாக்குதல்கள்
தாழ் மட்டத்துக்கு கட்டுப்படுத்தப்பட்டால் கிழக்கிலுள்ள இரு படைப்பிரிவுகளை (பிரிகேட்) வடக்குத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தக் கூடியதாயிருக்கும். இது வடக்குத் தாக்குதல்களுக்கு படையினருக்கு கைகொடுக்கும்.
வடக்கில் நடவடிக்கைகள்
வடக்கை பொறுத்தவரையில், விடுதலைப்புலிகள் தமது இதயபூமியை பாதுகாப்பதற்காக போராட வேண்டியுள்ளது. தொப்பிகலவை பாதுகாத்தல் என்கின்ற விடயம் விடுதலைப்புலிகளது தாக்கு திறனின் குறிகாட்டியாக அமையுமானால், இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ போன்றோர் மதிப்பிட்டதைப் போல, வடக்கில் தாக்குதல் நடவடிக்கைகள் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு நீடிக்கலாம்.
நடைபெறப்போகும் அனைத்து "தாய்ச் சண்டை"களுக்குமென விடுதலைப்புலிகள் தமக்கு வேண்டிய இராணுவ தளபாடங்களை சேர்த்து வைத்துள்ளனர். ஆனால், தாக்குதல்கள் நீடித்துச் சென்றாலேயே ஆயுதங்களுக்கான தட்டுப்பாடுகள் வெளியே தெரியவரும்.
இவற்றைப் பார்க்கின்ற பொழுது வடக்கில் தமது நடவடிக்கைகளுக்காக திட்டமிடும் படையினர் தமது உத்திகளை மீட்டுப்பார்க்க வேண்டும் (Rework) அதை அவர்கள் செய்வார்களென்றே தெரிகின்றது. அதாவது, சூட்டு வலுவை அதிகரித்தல் (Preponderance of Fire Power) புலிகளின் களஞ்சியப்படுத்தல்களையும் ஒதுக்கங்களையும் அழித்தல், அவர்களின் கடல்வழி விநியோகத்தை தடுக்க கடற்பரப்பில் தடைகளை ஏற்படுத்தல் மற்றும் இவற்றுக்கு பின்புலத்தில் விசேட படையினரை புலனாய்வுச் செயற்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதேவேளை, முகமாலை, வவுனியாவின் மேற்கு மற்றும் கிழக்கு ஓமந்தை மற்றும் மன்னார் எல்லைகள் ஆகிய பாதுகாப்பு முன்னரங்குகளில் நடைபெறும் சிறிய தாக்குதல்கள் இரு தரப்பினதும் வலுவை காட்டுகின்றன.
இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முழு அளவிலான யுத்தத்துக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். கிழக்கில் எவ்வாறு பயங்கரவாதிகளை எவ்வாறு அகற்றினோமோ அதேபோல் வடக்கிலிருந்தும் அவர்களை அகற்றினாலேயே நிரந்தர சமாதானத்தை இந்த நாட்டில் கொண்டுவரலாமென அவர் அண்மையில் கூறியிருப்பதானது போருக்கான சம்மதத்தையே காட்டுகின்றது.
இங்கு துன்பியலான யதார்த்தம் என்னவென்றால் துப்பாக்கிகள் தயாராகிவிட்டமையாலும் குண்டுகள் முக்கியமாகிவிட்டதாலும் சமாதானத்துக்கான சந்தர்ப்பங்கள் மூழ்கடிக்கப்படுவதேயாகும்.